தன் அண்ணன் இசைக்குழுவில் இசை அமைத்து கொண்டிருந்த இளையராஜா சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் குழுவிடம் சேர்ந்து பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களை இளையராஜாவிற்கு தன்ராஜ் மாஸ்டர் கற்றுக் கொடுத்தார். முதலில் பியானோ கற்றுக் கொள்வதற்காக வந்த இளையராஜாவின் ஆர்வத்தைக் கண்டு தன்ராஜ் மாஸ்டர் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு நண்பர்களின் உதவியுடன் ஜிகே வெங்கடேஷிடம் இளையராஜாவிற்கு அறிமுகம் கிடைத்தது அவரது குழுவில் சேர்ந்த பிறகு இளையராஜாவின் ஏழ்மை மாறி குறிப்பிடத்தக்க வருமானத்தை பெற ஆரம்பித்தார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெட் அமைக்கும் போது நோட்ஸ் எடுத்து கம்போசிங் செய்யும் அசிஸ்டெண்டாக இளையராஜா பணியாற்றினார். அதற்குப் பிறகு இளையராஜாவின் 33 வது வயதில் தான் அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது அந்த படம் 1976 இல் வெளிவந்த அன்னக்கிளி! இளையராஜாவின் இசையில் வெளிவந்த முதல் படமே நூறு நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது.
அதற்குப் பிறகு திரை உலகில் பல பாடல்களை பாடி இசையமைப்பாளராக வளம் வந்தார் இளையராஜா இவரது பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. திரையுலகில் நுழைந்த ஐந்து ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார்.. அதிலும் குறிப்பாக 1980களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டில் 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார், மேலும் அந்த காலகட்டத்தில் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களிலே நடித்தனர். ஆனால் கேப்டன் விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜ், முரளி, பிரபு, மோகன், சிவகுமார் போன்ற இரண்டாம் வரிசை நட்சத்திரங்கள் அதிக எண்ணிக்கையான படங்களை நடித்தனர் இவர்களின் படங்களிலும் இளையராஜாவின் இசை துள்ளி விளையாடியது. அது மட்டுமல்லாமல் பல பக்தி பாடல்களையும் இளையராஜா இசையமைத்தார். இந்த நிலையில் இளையராஜாவின் இசையில் வெளியான ஜனனி ஜனனி என்ற பாடல் தற்பொழுது மீண்டும் வைரலாகியுள்ளது.
மேலும், அந்த பாடல் பதிவு செய்யும்போது நடந்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது அதாவது, ஒரு பாடலைப் பதிவு செய்ய இளையராஜா மற்றும் அவரது குழு ஸ்டுடியோவில் ரெடி. யேசுதாஸ்தான் பாட வேண்டும். மொபைல் போன் இல்லாத காலம் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்து, கடைசியில் ரிகர்சல் செய்ய முழு இசையுடன் இளையராஜா அதைப் பாடிப் பதிவு செய்தார்.அதைக் கேட்ட முழு இசைக் குழுவினரும் இதையே ஓகே செய்துவிடலாம், மிக அருமையாக வந்திருக்கிறது என்று நினைத்தனர். ஆனால் ராஜாவிடம் யார் தைரியமாகச் சொல்லமுடியும் ? வம்பு வேண்டாம் என்று அமைதி காத்தனர்.யேசுதாஸ் வரவே முடியவில்லை, தவிர்க்க முடியாத காரணங்களால் . மறுநாள் வந்தார், வருத்தம் தெரிவித்தார். ராஜா முதல் நாள் பதிவு செய்த பாடலைக் கேளுங்கள், பிறகு வார்த்தை, வரிகளின் நயங்களை விளக்குகிறேன் என்று அப்பாடலைப் போட்டுக் காட்டினார். அதைக் கேட்டவுடன் யேசுதாஸ் கண்கலங்க ஆரம்பித்தார்.
ராஜாவைப் பார்த்து "இப்பாடலை கண்டிப்பாக என்னால் பாட முடியாது" என்றார். ஏன் என்று ராஜா கேட்க "உங்கள் அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக இந்த பாடலை என்னால் பாட முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு தத்ரூபமாக அமைந்துள்ளது. இது கடைக் கோடி மக்களின் மனதிலும் நிலைத்து நிற்க வேண்டும். அது உங்கள் குரலால் மட்டுமே முடியும். எனவே உங்கள் குரலில்தான் இந்தப் பாடல் அமைய வேண்டும்" என்று எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல், ராஜா குரலிலேயே பதிவு செய்யப்பட்ட பாடல்.... காலத்தால் அழியாத பாடலாக இன்றும் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்த பாடலை யேசுதாஸ் பாடியிருந்தால் இப்படி ஒரு வரவேற்பை இந்த பாடல் கண்டு இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக யேசுதாசே கூறியிருப்பது தற்போது இணையங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.