கடந்த வருடம் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு கடந்த முறைதான் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்கள் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த நிலையில் அஜித் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது, விஜய் படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வெளியிட்டார். இந்த இரண்டு படங்களும் வெளியாகும் முன்பே பல்வேறு அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது அதிலும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளை சந்தித்தது என்றே கூறலாம்.
தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யும் பொழுதும் வாரிசு படங்களுக்கு துணிவு படத்தைக் காட்டிலும் குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது, இதை இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே குறிப்பிட்டு வாரிசு படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இருப்பினும் வாரிசு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கும் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதால் வசூல் ரீதியாக வாரிசு படம் சரியான அளவில் போகவில்லை.
வாரிசு துணிவு பிரச்சனைகளுக்கு முன்பாகவே ஒவ்வொருமுறை விஜய் படம் திரையரங்குகளுக்கு வரும் பொழுது ஒவ்வொரு விதமான எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது அதுவும் திமுக ஆட்சி காலத்தில். தலைவா' வில் தொடங்கி பீஸ்ட் வரையிலும் இந்த எதிர்ப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அரசியல் எதிர்ப்புகளுக்கு பின்னணியில் வரும் காலத்தில் உதயநிதி அரசியலில் தீவிரமாக ஈடுபடும் பொழுது விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டால் அவருக்கு போட்டியாக அமையும் என திமுகவினர் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் கருதுவதால், விஜய்க்கு இதுபோன்ற அரசியல் குடைச்சல்களை கொடுத்து வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அரசியலில் குதிப்பது என விஜய் முடிவு எடுத்து விட்ட காரணத்தினால் கடந்த சில நாட்களாக விஜய்யின் நகர்வுகள் அரசியலை நோக்கியே இருந்து வருகின்றது.
அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த மாதங்களில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் ஆனால் காவல்துறையினரின் ஒப்புதல் அளிக்காததால் அந்த நிகழ்வு கைவிடப்பட்டது அதனை தொடர்ந்து தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகளால் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியலில் ஈடுபட உள்ளது என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் கிளப்பியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நின்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது இந்த நிலையில் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வெர்ஷன் சென்ட்ரலில் தற்போது நடந்து முடிந்த பொது தேர்வுகளில் அதாவது 234 தொகுதிகளில் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து அவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க உள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிளஸ் டூவில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினி மாணவியையும் விஜய் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் இளைஞர்களே எதிர்காலத்தின் தூண்கள் என்பதை மனதில் வைத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளை இளைஞர்களிடமிருந்து தொடங்கி அரசியலில் காலூன்ற உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக உதயநிதி மற்றும் அவரது ஆதரவாளர்களை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் சினிமா துறையில் இருந்து யாரும் தனக்கு எதிராக அரசியலுக்கு வர கூடாது என தீவிரமாக கணக்கு போட்டு இருந்த உதயநிதிக்கு விஜயின் அரசியல் வருகை உண்மையில் உருத்தலை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.