பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரையும் அவரது குழுவினரையும் தாக்க முயன்றார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
வைரலான ஒரு வீடியோவின் படி, விஜய் சேதுபதியை விமான நிலைய வளாகத்தில் இருந்து அவரது குழுவினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் வெளியே அழைத்துச் சென்றபோது, நடிகர் பின்னால் இருந்து ஓடிய அந்த நபர், குதித்து அவரை முழங்காலால் உதைக்க முயன்றார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் நடிகரை நோக்கி ஓடுவதை அவரது குழுவில் உள்ள சிலர் பார்த்தனர், ஆனால் அதற்குள் நடிகரின் உதவியாளர் தடுத்தார், அவரது குழுவினர் உடனடியாக தாக்க வந்த நபரை விலக்க முயன்றனர்.
பெங்களூரு விமான நிலைய காவல்துறையினர் கூற்றுப்படி, அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் போது விஜய் சேதுபதியை செல்ஃபி எடுக்க அணுகியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் சேதுபதிக்கு மது வாசனை வந்ததாகக் கூறப்படுகிறது,
இதனால் செல்பி எடுக்கும் கோரிக்கையை விஜய் சேதுபதி நிராகரித்தார். இந்த சம்பவத்தின் போது அவரது பி.ஏ அந்த நபரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் பொதுமக்கள் கண்டறிந்த காரணத்தால் எரிச்சல் அடைந்து விஜய் சேதுபதியை தாக்க நினைத்ததாகவும் இருப்பினும், தாக்குதல் நடந்த உடனேயே, விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் நிலைமையை கட்டுப்படுத்தி விஜய் சேதுபதியை காப்பாற்றியதாக தி நியூஸ் மினிட் குறிப்பிட்டுள்ளது .
இந்த சூழலில் பெங்களூரு காவல்துறையினர் அளித்த தகவலின்படி விஜய் சேதுபதி உதவியாளர் விஜய்சேதுபதி வருகைக்காக பயணிகளை விலக சொன்னதில் இளைஞர் மற்றும் விஜய் சேதுபதி உதவியாளர் இடையே கைகலப்பு ஏற்பட்டு பின்பு விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரண்டு தரப்பும் வழக்கு பதிவு செய்யவேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.தாக்குதல் நடத்தியவர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பெங்களூர் காவல்துறை தெரிவிக்கின்றன. மொத்தத்தில் தாக்குதல் நடத்திய நபர் யார் என்றும் விளம்பரத்திற்காக அவர் இவ்வாறு ஈடுபட்டரா அல்லது உண்மையில் அவ்வாறு ஈடுபட்டாரா ? காவல்துறை கூறியது தான் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாஸ்டர்செஃப் தமிழின் பிரீமியர் ஷூட்டிங்கிற்காக விஜய் சேதுபதி பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது. சில தகவல்களின்படி, அவர் அக்டோபர் 29 அன்று மறைந்த கன்னட நட்சத்திரம் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தையும் சந்தித்தார். ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான MasterChef சீரிஸின் தமிழ் பதிப்பை விஜய் தொகுத்து வழங்குகிறார். மாஸ்டர் செஃப் தமிழ் சன்டிவியில் ஒளிபரப்பாகும். பிரபல நடிகை தமன்னா பாட்டியா பங்கேற்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில், தமிழ் படங்கள் விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல், மலையாளப் படம் 19(1)(அ) மற்றும் இந்தி படம் மும்பைகார் உள்ளிட்ட பல படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் உள்ளது.