அரசு விதிமுறைகளை மீறிய நடிகர் சூர்யா குடும்பத்தின் மீது பாரதிய ஜனதா கட்சியினர் போலீஸில் புகார் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சங்க காலப் பாடல்களின் சிலப்பதிகாரம், மதுரைகாஞ்சி போன்றவற்றில் குறிப்பிட்டிருந்த தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய பொருட்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படி ஆராய்ச்சியின் மூலம் சேகரித்த தொல்லியல் பொருட்களை பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. பின்பு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக கட்டணமும் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கீழடியில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவருடைய தந்தை சிவக்குமார், தாயார் லட்சுமி சிவக்குமார் ஆகியோர் ஏப்ரல் 1 ஆம் தேதி வருகை புரிந்து பார்வையிட்டனர்.
கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வையிட காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சூர்யாவின் குடும்பத்தினர் தமிழக அரசின் விதிமுறைகளை மதிக்காமல், குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கும் முன்பாக அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்று திறானிகள் ஆகியோர் பல மணிநேரம் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை கண்டித்த மதுரை மாவட்டத்தின் பாஜக தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் நடிகர் சூர்யாவின் குடும்பம் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று பார்வையிட்டுள்ளதாகவும், இதனால் பள்ளி மற்று கல்லூரி மாணவர்கள் அதிக நேரம் கடும் வெயிலில் காதிருந்தாகவும் தெரிவித்தனர்.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி.வெங்கடேசன் நடத்தை விதிமுறைகளை மீறி நடிகர் சூர்யாவின் குடும்பத்தை அருங்காட்சியத்திற்கு உள்ளே அழைத்து சென்றுள்ளார். அதற்கு துணை புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் லோக்சபா எம்பி வெங்கடேசன் மீது தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுகொண்டனர்.மேலும் இனி வரும் காலங்களில் கீழடியில் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் என அனைத்தையும் தமிழக அரசு, மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.