Cinema

வித்தியாசமான முறையில் ஜெய்பீம் படத்திற்கு விமர்சனம் எழுதிய பானுகோம்ஸ்!!

Banu gomes
Banu gomes

அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான பானு கோம்ஸ் சற்று வித்தியாசமான முறையில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து விமர்சனம் எழுதியுள்ளார், இதுகுறித்து அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-


ஜெய் பீம் பல வருடங்களுக்கு பிறகு அசட்டுத்தனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இல்லாத சிறப்பான தமிழ் திரைப்படம்,தமிழ் திரை உலகம் ..அரசியலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் அவரவர் அரசியலை பதிய வைக்கும் பிரச்சார வாகனங்களாக தான் ஒவ்வொரு திரைப்படமும் உருவாக்கப்படுகிறது,வெளிவருகிறது.

இந்த கள யதார்த்தத்தின் அடிப்படையின் மீது தான் திரைப்படங்களை அணுக முடியும். அணுக வேண்டும். அந்த வகையில் ஜெய் பீம் படத்திலும் இடது அரசியலின் பிரச்சார அரசியல் அதிகம். 

வழக்கமான மார்க்ஸ், லெனின் குறியீடுகள் தாண்டி சம்பந்தமேயில்லாமல் தமிழ், தெலுங்கு என்று மொழிவாத தூண்டுதல்கள், கோழையாகவும், அசடாகவும் காட்டப்படும் சட்டம் படித்த சக வக்கீல் சம்பந்தமேயில்லாமல் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்கும் ''ஓம் நமசிவாய'' என்று பரவலாக அரசியல் திணிப்பு.

அதனால் இதெல்லாம் திணிக்கப்பட்ட அரசியல் என்று புரிந்து புறம் தள்ளிவிட்டு உண்மைச்சம்பவமான படத்தின் கதை, நடிப்பு, காட்சிகளின் நகர்வு என்று இப் படத்தை பற்றி பார்க்கலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக நகர்கிறது.

பழங்குடியினராக வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் குறிப்பாக செங்கேனி ! விருதே கொடுக்கலாம். சூர்யா வெகு சிறப்பு.

தமிழகத்தில் நடந்த கொடூரமான ஒரு உண்மை நிகழ்வினை மனதில் அறையும் விதத்தில் மிக மிக அழுத்தமாக சொல்லி இருக்கும் படம். வக்கீல்கள், காவல்துறையினர் இரண்டிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உண்டு என்று பேலன்ஸ் பண்ண முயற்சித்திருந்தாலும் எடுபடவில்லை. பிரகாஷ்ராஜ்- க்கு பதிலாக வேறு யாரையேனும் அப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.

பல வருடங்களுக்கு பிறகு தமிழில் நேர்த்தியான முறையில் சொல்லப்பட்ட சிறப்பான திரைப்படம்! பார்க்க வேண்டிய படம். Powerful movie.இப் படம் வேறு சில உண்மைகளையும் சொல்லாமலே புரியவைக்கிறது.

கேட்பாரற்ற , வாக்கு அடையாளம் கூட இல்லாத ஏழை பழங்குடி மக்கள் என்பதால் விசாரணை, வழக்கு பதிவு, உடலை அப்புறப்படுத்துதல் முதல் நீதிமன்ற வாதங்கள் வரை சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அலட்சியமாக ஈடுபடுகிறார்கள்.

அதனால் ஒரே ஒரு வக்கீல் உண்மையாக மெனக்கிடும்போது உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்கமுடிகிறது.இதுவே வலிமை வாய்ந்தவர்கள் எனும்போது உண்மைகள் ஆதாரமில்லை என்று வாயடைத்துப் போகின்றன  மெனக்கிடும் வக்கீல்களையும் காண முடிவதில்லை. 

சட்ட நுணுக்கங்களோ சாமானியருக்கு எட்டாத உயரத்தில் கோடிகளில் சம்பளம் பெறும் வக்கீல்களிடம் வசப்பட்டு நிற்கிறது. என ஜெய்பீம் திரைப்படத்தில் சொல்ல பட்ட திரைக்கதையை நிகழ் கால அரசியலுடன் ஒப்பிட்டு சற்று வித்தியாசமான முறையில் ஜெய்பீம் திரைப்படம் குறித்த தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் பானு கோம்ஸ்.